Wednesday, April 18, 2012


திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில், நவதிருப்பதிகளில் செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் திருக்கோளூர் திருத்தலமாகும்.


பிறப்பற்று மூப்புப் பிணியற்றுநாளு
மிறப்பற்று வாழவிருப்பீர் புறப்பற்றுத்
தள்ளுங்கோ ளுராவிற்றாமோதரன் பள்ளி
கொள்ளுங் கோளூர் மருஷங்கோள்!!
(108 திருப்பதி அந்தாதி 58)

திருக்கோயில் அமைவிடம்:
நவதிருப்பதிகளில் செவ்வாய் தலமாக விளங்கும் இந்த திருக்கோளூர் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து சுமார் 36 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 km வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 km சென்றால், இந்த திருக்கோளூர் திருத்தலத்தை அடையலாம்.


திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி: வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்), புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார்
தல தீர்த்தம்: குபேர தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: ஸ்ரீகரவிமானம்
கிரகம்: செவ்வாய் ஸ்தலம்


திருத்தல வரலாறு:
பல கோடி வருடங்களுக்கு முன்பாக செல்வத்திற்கு அதிபதியான குபேரன், அளகாபுரியில் சிறப்புடன் வாழ்ந்து வந்தான். குபேரன் மிகுந்த சிவ பக்தனும் ஆவான். ஒரு சமயம் மிகுந்த அன்புடனும், பக்தியுடனும் சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றான். அந்த அழகிய பொழுதில் சிவனும் பார்வதியும் குபேரனுக்கு ஒருசேரக் காட்சி தந்தனர். மிகுந்த பக்திப் பெருக்குடன் சிவனைக் காணச் சென்ற குபேரன், தன் தாய் போன்ற பார்வதி தேவியை தீய எண்ணத்துடன் நோக்கியதாக பார்வதி தேவி குபேரன் மீது கடும் கோபம் கொண்டார்.

அந்த கோபத்தின் உக்கிரத்தில் குபேரனுக்கு சாபமிட்டாள் பார்வதி தேவி. "குபேரனது உருவம் விகாரம் அடையவும், அவனிடம் உள்ள செல்வங்களும், நவநிதிகளும் குபேரனை விட்டு அகலட்டும் என்றும், குபேரனுக்கு ஒரு கண் பார்வை அற்றுப் போகட்டும்" என்றும் சாபமிட்டாள். குபேரனும் தனது தவறினை உணர்ந்து சிவனிடம் சென்று முறையிட, அவரும் அன்னை பார்வதியிடம் சென்று மன்னிப்புக் கோரச் சொன்னார். அவ்வாறே பார்வதியிடம் அடிபணிந்து மன்னிப்புக் கோரினார் குபேரன். அந்நிலையில் பார்வதி தாயார், குபேரனிடம், இனி உனக்கு கண் பார்வை வராது, உன் உடல் விகாரம் குறையாது, ஆனால் இழந்த நிதிகளை, அவை சென்று அடைந்துள்ள வைத்தமாநிதி பெருமாளை வேண்டி தவம் புரிந்து பெற்றுக்கொள் எனக் கூறி அனுப்பினாள்.

குபேரனும் அதுபோலவே வைத்தமாநிதி பெருமாளை வேண்டி தவம் புரிந்து பாதி நிதியைப் பெற்றான். பெற்ற அந்த செல்வங்களை ஒரே இடத்தில் நிலைத்து இல்லாமல் எல்லோருக்கும் பரவலாகக் கிடைக்கும் வண்ணம் லக்ஷ்மி தேவியிடம் கொடுத்தான்.

தொடர்ந்து ஒரே நபரிடம் கொட்டிக் கிடக்கும் செல்வம் இருக்கும் இடத்தில் தர்மம் நிலைக்காது என்பதும், அங்கே அதர்மம் ஆள ஆரம்பித்துவிடும் என்பதும், அதனாலேயே செல்வம் ஒருவரிடத்தில் நிலையாக இல்லாமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது பெருமாள் அனுகிரகம். தர்மதேவன் நிலையாக இங்கேயே தங்கி இத்திருக்கோயில் பெருமாளை வழிபாடு செய்வதாக ஐதீகம்.

இவ்வாறாக தர்மம் அதர்மத்தை வென்று இத்தலத்திலேயே தங்கி விட்டதால், மற்ற இடங்களில் அதர்மத்திற்கு கொண்டாட்டமாகிவிட்டது. அதனால் அச்சம் கொண்ட தேவர்கள் தர்மத்தைத் தேடி நிதிவனத்திற்கு வந்தனர். இங்கும் தன்னைத் தேடி வந்த அதர்மத்தை, தர்மம் வென்றதனால், இத்தலத்திற்கு அதர்மபிசுனம் என்ற பெயர் உண்டானது.


இதற்கு முன்பாக, சுவர்த்தனன் என்பவரது பிள்ளையான தர்மகுப்தன், திருமண பந்தத்தின் வாயிலாக எட்டு பிள்ளைகளையும், இரண்டு பெண்களையும் பெற்று அதன் காரணமாக மிகுந்த வறுமைக்கு ஆட்பட்டான். தனது ஏழ்மை நிலையினை போக்கும் நோக்கத்தில் நர்மதா நதிக் கரையில் வாழ்ந்து வந்த பரத்வாஜ முனிவரை வேண்டி நின்றான். அவரும் தனது தவ வலிமையினால் தர்மகுப்தனது முன் ஜென்ம பாவங்களை அறிந்து கொண்டார். அதனை தர்மகுப்தனிடம், "நீ உனது முற்பிறவியில் அந்தணராகப் பிறந்து பெரும் செல்வந்தனாக வாழ்ந்தாய், அந்த சமயத்தில் அரசன் வந்து கேட்ட போது, அளவுக்கு மிஞ்சிய செல்வம் உன்னிடம் இருந்த போதும், அதனை மறைத்து உன்னிடம் எவ்வளவு செல்வம் உள்ளது என்பதை மறைத்து பொய் கூறினாய். உன்னுடைய செல்வத்தை நல்ல விதமாக யாருக்கும் உதவி செய்யும் நோக்கில் பயன்படுத்தாமல், பூட்டி வைத்து அழகு பார்த்தாய். அந்த செல்வம் உண்மையிலேயே கஷ்டப் படுகிறவர்களுக்குப் பயன்படாமல், அந்த செல்வங்கள் கள்வர்கள் கையில் சிக்கியது. அந்த வேதனையில் மனம் பாதிக்கப் பட்டு நீ உயிரிழந்தாய். தாமிரபரணியின் தென் கரையில், உள்ள திருக்கோளூரில் குபேரனது நவநிதிகளும் இருக்கின்றன. அங்கு சென்று வைத்தமாநிதி பெருமாளை வழிபட்டால் இழந்த செல்வத்தினைப் பெறலாம்" என்று கூறினார்.

தர்மகுப்தனும் அவ்வாறே திருக்கோளூர் வந்து பெருமாளை வணங்கி செல்வம் பெற்றான். இந்தக் கதையினைக் குபேரனிடம் பார்வதி தேவி சொல்லி "நீயும் அத்தலம் சென்று இறைவனை வேண்ட உன் செல்வம் திரும்பக் கிடைக்கும்" என்றாள் அன்னை பார்வதி.

இவ்வாறு தான் இழந்த செல்வத்தை, மாசி மாத சுக்லபட்ச துவாதசியில் பெருமாளிடம் இருந்து பெற்ற காரணத்தால் இன்றும் அந்த நாளில் குபேர தீர்த்தத்தில் நீராடி வைத்தமாநிதியை வழிபாடு செய்கின்றனர். அவ்வாறு செய்வதால் இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் பெருமாள் செல்வம் அளந்ததால், மரக்காலைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார். மரக்காலைத் தலைக்கு வைத்து, கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்குள்ளது என பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இங்கு வசித்த விஷ்ணுநேசர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் மதுரகவி ஆழ்வார். இவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இந்த மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம் இந்த திருக்கோளூர் தலம் என்பது கூடுதல் சிறப்பாகும்.


மதுரகவி ஆழ்வாரைப் பற்றி சொல்லும் போது கேள்விப்படும்போது, குரு பக்தி என்னும் மேலான விஷயம் ஒருவரை வாழ்வில் எத்தனை உயரத்திற்கு கொண்டு செல்கிறது என்பதை உணர்த்தும் வண்ணம் உள்ளது. 80 வயதான மதுரகவி, தமது வடதேச பிரயாணத்தின்போது தன் வாழ்வில் தனக்கு ஒரு குரு கிடைத்தால்தான் உய்வடையலாம் என்று உணர்ந்து, பின்னர் தெற்கு நோக்கிப் பயணித்து, 16 வயதே நிரம்பிய நம்மாழ்வாரைக் குருவாக ஏற்றுக்கொண்டார். தனது ஆச்சார்யனின் அருளுக்குப் பாத்திரமாகி, அவரை மட்டுமே பாடியவர், பெருமாளைப் பற்றி ஒரு பாசுரம் கூடப் பாடவில்லை. தனக்குக் கடவுளை உணர்த்திய குருவைப் பாடினால் அவரே தன்னை மேன்மை அடையச் செய்வார் என்ற மாறாத நம்பிக்கையை அவர் மேல் கொண்டு 11 பாசுரங்கள் மட்டும் தன் குருவின் மேல் பாடி பரமனின் பாதங்களில் சரணடைந்தார். குருவின் மூலமாகவே, ஆழ்வார் என்ற பெரும் பேறு அவருக்குக் கிடைத்தது. இந்த மதுரகவி ஆழ்வாரின் உயர்ந்த செயல், நம் அனைவருக்கும் ஆச்சாரியனின் பெருமையை உணர்த்தும் என்பதில் துளியும் ஐயமில்லை.

உண்ணும் சோறும் பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மகிக் அவனூர் வினவி
தண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே!!
- நம்மாழ்வார்

18 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராமலக்ஷ்மி...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

ADHI VENKAT said...

கோவிலை பற்றிய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோவை2தில்லி.....

வருகைக்கு மிக்க நன்றிங்க ஆதிவெங்கட்.

கோமதி அரசு said...

போனமாதம் தான் நவதிருப்பதிகளுக்கும் போய் வந்தோம்.

மறுபடியும் உங்கள் பதிவின் மூலம் தரிசனம்.

நன்றி புவனேஸவரி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோமதி அரசு....

ஒரு சேர நவதிருப்பதி திருக்கோயில்களையும் தரிசனம்
செய்யும் அனுபவம் பேரானந்தம்தான். தங்களுக்கும்
நவதிருப்பதி தரிசனம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி
கோமதியம்மா. மிக்க நன்றி.

Asiya Omar said...

கொஞ்சம் நாளாய் காணோமேன்னு நினைச்சேன்.வந்திட்டீங்களா?சந்தோஷம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Asiya Omar.......

எனக்கும் சந்தோஷம்தான் ஆசியாம்மா.
மிக்க நன்றி.

அப்பாதுரை said...

சுவாரசியமான கதைகள். ஒரே ஒரு ராணி பெத்தா ஒன்பது பிள்ளை..பாடல் வரி ஏனோ ஞாபகம் வருது.
திருக்கோளூர் முருகர் தலம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

Pushpa said...

Beautiful post.Enjoyed reading it.

Yaathoramani.blogspot.com said...

அழகிய படங்களுடன்
மிக நேர்த்தியாக ஸ்தல வரலாற்றைச்
சொல்லிச் சென்ற விதம் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

@அப்பாதுரை...

வருகைக்கு நன்றி அப்பாதுரை சார்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Pushpa...

ரசித்தமைக்கு மிக்க நன்றி புஷ்பா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Ramani.....

வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
ஐயா.

Kanchana Radhakrishnan said...

நல்ல பகிர்வு

Vikis Kitchen said...

கோவில் அழகாக இருக்கிறது புவனா. ஸ்தல வரலாறும், அதில் பொதிந்துள்ள நீதியும் அருமை.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Kanchana Radhakrishnan.....

மிக்க நன்றி காஞ்சனா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Vikis Kitchen....

வருகைக்கு நன்றி விக்கி.

Post a Comment

Related Posts with Thumbnails