Thursday, November 18, 2010


குடுமியான்மலை - காலத்தை வென்ற கலைச்சுரங்கம்

விதையின் விஸ்வரூபமாய் மரம் ....
விதியின் விஸ்வரூபமாய் வாழ்க்கை....
விழியின் விஸ்வரூபமாய் கண்ணீர்....
வீணையின் விஸ்வரூபமாய் இசை....
நதியின் விஸ்வரூபமாய் கடல்....
மழையின் விஸ்வரூபமாய் வெள்ளம்....
காற்றின் விஸ்வரூபமாய் புயல்....
கலையின் விஸ்வரூபமாய் சிற்பம்....
சிற்பக்கலையின் விஸ்வரூபமாய் குடுமியான் மலை....

ஆம்.. குடுமியான் மலை கோயிலே ஒரு கலைச் சுரங்கமாய் விளங்குகிறது. திருக்கோயிலின் உள்ளே நுழைந்தது முதல், கோயிலை முழுவதும் சுற்றி வந்து திரும்பும் வரை சிற்பங்களின் ராஜ்ஜியமே. நாம் கண்ணுறங்கும் நேரத்தில் காணும் கனவுகள் கண்விழித்ததும் காணாமல் போய்விடும். கனவில் காணும் சிலைகள்தான் நேரில் வந்தனவோ என நினைக்கும் அளவிற்கு அத்தனை தத்ரூபமான, நுட்பமான, நுண்ணிய வேலைப்பாடுடைய சிற்பங்கள்.


இத்திருக்கோயில், குன்றின் அடிவாரத்தில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. குன்றின் மேல், அதன் அருகில் என மொத்தம் நான்கு கோயில்கள் அமைந்துள்ளன. சோழநாட்டில் அமைந்துள்ள தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற ஊர்களில் அமைந்துள்ள திருக்கோயில்கள், பாண்டிய நாட்டில் அமைந்துள்ள மதுரை, திருநெல்வேலி என்று இந்த ஊர்களில் அமைந்துள்ள திருக்கோயில்கள் போல இந்த சிற்பக்கலையில் சிறந்து விளங்கும், குடுமியான்மலை நிறைய மக்களுக்கு சென்றடைந்துள்ளதா என்று தெரியவில்லை. இத்திருக்கோயிலின் பழமையினால், சிற்பங்களின் செழுமையினால் இந்திய தொல்பொருள்துறையின் கீழ் கொண்டுவந்துள்ளனர். தற்போது இங்கு திருக்கோயிலை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருக்கோயில் கோபுர வாசலை தாண்டி, உள்ளே உள்ள மண்டபத்தில் அத்தனைவிதமான சிற்பங்களின் அணிவகுப்பு. அத்தனை சிலைகளிலும் அப்படி ஒரு தத்ரூபம்.

லட்சுமணன் உயிர்காக்க மலையையே பெயர்த்து எடுத்து வந்த அன்பின் இலக்கணமான அனுமன்.


தன் அடியவர்களின் குறைகளை அவர்கள் மனதில் நினைத்த மாத்திரத்தில் வந்து முடிக்கும் கருணை உள்ளம் கொண்ட நரசிம்மர் இரணியனை வதம் செய்யும் காட்சி, நம் கண் முன்னே நடப்பது போன்ற பிரமை.


ஏறுமயில் ஏறி விளையாடுமுகம் ஒன்று,
ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று,
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று,
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று,
மாறுபாடு சூரரை வதைத்த முகம் ஒன்று,
மாசிலா வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று..
என்ற பாடலை நினைவூட்டும் விதமாக அமைந்த மயில் மேல் அமர்ந்த ஆறுமுகனின் சிற்பம்.


சாதாரணமாக, எளிமையாக எல்லா பக்தர்களின் நெஞ்சத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் எளிமையின் வடிவமாக விளங்கும் விநாயகரின், ஒற்றைக் காலைத் தூக்கி ஆடும் நிலையில் உள்ள விநாயகர் சிற்பம்.


எத்தனை கடவுள் பக்தி இருந்தாலும், எத்தனை வீரம் நிறைந்திருந்தாலும், தவறான பாதையில் சென்றால் அழிவு நிச்சயம் என்பதை உணர்த்தும் காவிய நாயகன் இராவணனின் பத்து தலை வடிவ சிற்பம்.


லிங்கத்தின் மேல் தன் அன்பு மிகுதியால் பாலைச் சுரக்கும் பசுவின் அற்புதச் சிற்பம்.


மூவுலகையும் காக்கும் மஹா விஷ்ணுவின் அபயக் கரத்துடனான அழகிய சிற்பம்.


அசுரனை வதைக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவின் பேரழகு சிலை.


தீயவர்களை வென்று நல்லவைகளைக் காக்கும் மகிஷாசுரமர்த்தினியின் அபாரத் தோற்றம்.


சிவபிரானின் நடன அசைவுகளில், தாண்டவங்களில் ஒன்றான ஊர்த்துவ தாண்டவத்தின் சிற்ப வடிவம்.


அழகின் அடையாளங்களாகக் கருதப்படும் ரதி, மன்மதன் சிலைகள்.



நுழைவு மண்டபத்தைத் தாண்டி பிரகாரத்தில் சுற்றி வரும்போது சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு அருகில் ஒரு முகத்துடன் கூடிய இரு உடல் அமைப்பு. காண்போரை வியப்பில் ஆழ்த்தும் சிலை அமைப்பு இது.


திருக்கோயில் பிரகாரத்தினை சுற்றி வரும் போது, மலையின் மேல் ஏறிப் பார்க்கவேண்டிய அவசியமில்லாமல் பிரகாரத்தில் இருந்தே அறுபத்துமூன்று நாயன்மார்களின் வடிவங்கள், ரிஷப வாகனத்தின் மேல் சிவன்,பார்வதி வடிவம் மலையில் செதுக்கப் பட்டுள்ள அற்புதம். பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் பிரகாரத்தில்தான் இந்த அறுபத்துமூவர் சிலைகளை காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். அதுவும் ஒரே நேரத்தில் காண முடியாத வண்ணம் நீண்டு காணப்படும். ஆனால் ஒரே பார்வையில் அத்தனை நாயன்மார்களையும் ரிஷபத்தில் அமர்ந்த சிவன் பார்வதி, என அனைவரையும் பார்க்க முடிவது தமிழகத்தில் இந்தக் கோயிலில் மட்டும்தான். இது ஒரு சிற்ப அதிசயம்.


முருகன் சன்னதிக்கு முன்பாக மேல் கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும் விதமாக கட்டங்கள் போன்ற அமைப்பினை வடித்துள்ளனர்.


இவை அனைத்தும் முன்புறம் அமைந்துள்ள கற்கோயிலில் அமைந்துள்ளன. பின் புறமாக அமைந்துள்ள குடைவரைக் கோயில் அதிசய சிற்பங்களின் அபூர்வக் களஞ்சியமாக விளங்குகிறது.

சிரித்த முகத்துடன் கூடிய த்வாரபாலகரின் தோற்றம் வேறு எந்த கோயிலிலும் காண முடியாத சிறப்பம்சம்.


சிவன் சன்னதியின் வெளிச்சுவற்றிலேயே வலஞ்சுழி விநாயகரின் அற்புதத் தோற்றம்.


எங்கும் காண முடியாத இசையின் வடிவத்தை விளக்கும் வண்ணம் அமைந்த இசைக் கல்வெட்டு.


இசைக் கல்வெட்டின் அருகிலேயே புடைப்புச் சிற்ப வடிவ அமைப்பில் பிள்ளையார் உருவம் பொறிக்கப் பட்டுள்ளது. இயற்கைப் பாதுகாப்பை தேனீக்களும், தெய்வீகப் பாதுகாப்பை விநாயகரும் தருகின்றனர்.


திருக்கோயில் முழவதும் அத்தனை சிலைகளும் பிண்ணப்படுத்தப் பட்டுள்ளன. ஆனால் இசைக் கல்வெட்டு பகுதி மட்டும், பல நூற்றாண்டுகளைக் கடந்தும், புதுப் பொலிவுடன் காணப்படுகிறது. அதற்குக் காரணம், இயற்கையை வெல்ல யாராலும் முடியாது என்பதை நிரூபிக்கும் வண்ணம் அந்த பகுதியை அருகில் சென்று காண முடியாத அளவிற்கு, ஒரே இடத்தில் பத்து பதினைந்து தேன்கூடுகள். இயற்கை அமைத்த அரண். இந்த காட்சியினைக் காணும்போதே மெய் சிலிர்க்கிறது.


முன்புறம் அமைந்துள்ள கோயிலில் சிகாநாதர் குடிகொண்டுள்ளார். மற்றொரு தனிக் கோயிலில் அகிலாண்டேஸ்வரி தாயார் அருள்பாலிக்கிறார்.

இந்த திருக்கோயில் புதுக்கோட்டையில் இருந்து கொடும்பாளூர் வழியாக மணப்பாறை செல்லும் வழியில் 20 km தொலைவில் அமைந்துள்ளது.


திருக்கோயில் சிறப்புக்கள்:
இத்திருக்கோயிலில் மொத்தம் 120 கல்வெட்டுக்கள் காணப்படுவதாக சொல்கிறார்கள். இது ஒரு சனி பரிகாரத் தலமாக கருதப்படுகறது. மலை உச்சியில் நாயன்மார்கள், மலை ஏறிச் சென்று காண வேண்டிய அவசியம் இல்லாமல், பிரகாரத்தில் இருந்தே தரிசனம். நாயன்மார்கள் சிலைகள் முடியும் இடத்தில் விநாயகர் சிலை வைப்பது மரபு. ஆனால் மலையுச்சியில் செதுக்கப் பட்டுள்ள நாயன்மார்களின் நடுவே ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதி அமைந்துள்ளது வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு அமைப்பு.


இத்திருக்கோயில் சிவாலயமாக இருந்தாலும் பெருமாளின் பத்து அவதாரங்களான தசாவதாரச் சிற்பங்கள் தூண்களில் அமைக்கப் பட்டுள்ளன. குதிரை மேல் அமர்ந்த வண்ணம் உள்ள வீரனின் சிலை கல்கி அவதாரமாகவே எண்ணப்படுகிறது. கோயிலின் உள்ளே அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபம் வரலாற்று அதிசயம்.

நவக்ரகங்களின் அடிப்படையில் சனி ஸ்தலமாக கொள்ளப்பட்டுள்ள தலம். 10-ம் நூற்றாண்டில் திருநலக்குன்றம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் சிகாநல்லூர் எனவும், தற்போது குடுமியான் மலை என்றும் அழைக்கப்படுகிறது. சனீஸ்வரனால் சோதனை மிகுந்து காணப்பட்ட காலத்தில் நளன் இத்தலம் வந்து சிகாநாதரை வணங்கி அருள் பெற்றான் என்பது புராண காலக் கதை.

சங்கீதக் கலை வித்தகர்கள் நிச்சயம் காணவேண்டிய திருக்கோயில் இது. சங்கீதம் பற்றிய விதிமுறைகள் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளது. அவை கிரந்த எழுத்தில் காணப்படுகின்றன. ருத்ராச்சாரியார் என்பவரின் சீடரான பரம மகேஸ்வரன் என்ற மன்னன் இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ராகங்களைப் பாடியுள்ளதாக வரலாறு கூறுகிறது.


கற்கோயிலின் பின்புறம் அமைந்துள்ள குடைவரைக் கோயில் அமைந்துள்ள நிலப் பகுதியை அப்போது ஆண்ட அரசர் ஏலம் விட நினைத்தார். ஏலம் விட்ட பணத்தில் அம்மனுக்கு தனிக் கோயில் கட்ட நினைத்தார் அரசர். இதனைக் கேள்வியுற்ற உமையாள்நாச்சி என்ற தேவதாசி தன்னிடம் இருந்த நகைகள் மற்றும் நிலப் பத்திரங்களை அரசரிடம் கொடுத்து கோயில் நிலத்தை ஏலம் விடவேண்டாம் எனவும், தன்னிடம் உள்ள இந்த சொத்துக்களை வைத்து அம்மனுக்கு தனிக் கோயில் கட்ட வேண்டியுள்ளார். இதனை ஏற்ற அரசர் அந்தப் பெண்மணி கொடுத்த செல்வத்திலேயே தாயாருக்கு தனிக் கோயில் அமைத்து அப்பெண்ணின் பெயரிலேயே திருக்காமக் கோட்டத்து அருவுடை மலைமங்கை நாச்சியார் என்ற பெயரிலேயே குடைவரைக் கோயில் தாயாரின் பெயர் விளங்கியது. இப்பெயர் மறைந்து பிற்காலத்தில் சௌந்தரநாயகி என்ற பெயருடன் விளங்குகிறது. குடைவரைகோயில் பெருமான் திருநலத்து நாயனார் திருமேற்றளி என்ற பெயருடன் விளங்குகிறார்.

திருத்தல வரலாறு:
லிங்க வடிவில் காணப்படும் சிவபிரான் இத்திருக்கோயிலில் குடுமியுடன் காணப்படுகிறார். குடுமியான் என்றால் உயர்ந்தவன் என்றும், குடுமி என்றால் மலை உச்சி என்றும் பொருள்படும்படி உள்ளது. உயர்ந்த மலைக் குன்றை ஒட்டி அமைந்த கோயிலில் குடிகொண்டுள்ளதால் குடுமியான்மலை என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில் குடுமியான்மலையும் ஒன்று.


முன்னொரு காலத்தில் இக்கோயில் அர்ச்சகராக இருந்த ஒருவர் சிவனுக்கு நாள்தோறும் தனது பணிகளை சீரியவண்ணம் செய்து கொண்டிருந்தார். அந்நிலையில் ஒருநாள் இரவு இறைவனுக்கு நடக்கும் அர்த்தஜாம பூஜைக்கு அரசர் வர கால தாமதம் ஏற்படவே, சுவாமிக்கு வைத்திருந்த பூவினை தனது காதலிக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டார். திடீரென அரசர் கோயிலுக்கு வரவே என்ன செய்வதென்று தெரியாமல், அப்பெண்ணிடம் கொடுத்த பூவினை திரும்ப எடுத்து வந்து இறைவனுக்கு சூட்டி பூஜை செய்து மன்னனுக்கு பிரசாதமாகக் கொடுத்தார். அப்போது அந்தப் பூவில் ஒரு முடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அரசர் இது என்ன என்று வினவினார் மன்னர் அர்ச்சகரிடம்.

என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த அர்ச்சகர் அது, சிவனின் குடுமியில் இருந்து வந்த முடிதான் எனவும், இக்கோயில் சிவனுக்கு குடுமி உள்ளது எனவும், அர்ச்சகர் கூறினார். சந்தேகம் விலகாத மன்னர் இன்று இரவு தான் இங்கேயே தங்க உள்ளதாகவும், விடியற்காலை சன்னதி திறந்ததும், தனக்கு இறைவனின் குடுமியை காட்டவேண்டும் எனவும், கட்டளை இட்டார். இல்லையெனில் அடுத்த நாள் சிரச்சேதம் செய்யப்படுவாய் என்றும் ஆணையிட்டார். அரசர் சொன்னது போல அங்கேயே தங்கியும் விட்டார். தான் எத்தனை பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்த அர்ச்சகர், முக்கண்ணனின் காலடியினைப் பிடித்து மன்றாடினார். தன்னை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காக்கும்படி வேண்டினார். அவர் முன் தோன்றிய பெருமான், ''நீ உன் தவறை உணர்ந்ததால் வெறும் மூன்று நாழிகை மட்டும் நான் குடுமியுடன் இருப்பேன், அதற்குள் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்'', என்று கூறி மறைந்தார்.

அடுத்த நாள் காலை மன்னனனிடம் சிவனுக்கு குடுமி உள்ளது என்பதைக் காண்பித்தார் அர்ச்சகர். ஆனாலும் சந்தேகம் நீங்காத அரசர் குடுமியை இழுக்த்துப் பார்த்தார். இழுத்த வேகத்தில் சிவனின் தலையில் இருந்து இரத்தம் பீறிட்டது. இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியுற்றனர். மன்னரும் சிவனின் தலையில் குடுமி இருப்பது உண்மைதான் என்பதை உணர்ந்து, சுவாமி தன்னை மன்னித்தருள வேண்டினார். தன் கருணை உள்ளத்துடன் அனைவரையும் மன்னித்தருளிய இறைவன் இது தனது திருவிளையாடல் என்பதையும் அனைவருக்கும் உணர்த்தினார். அன்று முதல் அழகிய குடுமியுடன் காணப்படுகிறார் இக்கோயில் சிவபிரான்.


இப்பூவுலகில் மனிதராய் பிறந்த அனைவருக்கும் மனசாட்சி எழுதிய சட்டங்கள் சில உள்ளன. பெற்றோரைப் பேணி காப்பது, பெரியோரை வணங்குவது, தாய் நாட்டை காப்பது, மட்டுமல்லாது, நம் நாட்டை இழித்துப் பேசாமல் இருப்பது, போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த வரிசையில் உள்ளன. அந்த வரிசையில் நமது கலை வடிவங்களை போற்றிப் பாதுகாப்பது. நம்மால் இதுபோன்ற கலைப் பொக்கிஷங்களை உருவாக்குவது என்பது பெரிய விஷயம். ஆனால் நம் ஒவ்வொருவராலும் முடியக்கூடிய விஷயம் இவற்றைப் பாதுகாப்பது. இது போன்ற செயல்கள் மூலமாகவும் நாம் நமது தேசப் பற்றினை வெளிப்படுத்தலாம்.

38 comments:

தமிழ் அமுதன் said...

அருமையான... அழகான படங்கள்...
நல்ல விவரங்களுடன் கூடிய பதிவு..
மிக்க நன்றி...!

ஆயில்யன் said...

ஒவ்வொரு வருட மே மாத விடுமுறையில் புதுகை விசிட்டும் அதில் ஞாயிற்றுகிழமைகளில் இந்த குடுமியான் மலை விசிட்டும் பல முறை நடந்திருக்கிறது! #ஞாபகம்வருதே பாடவைச்சிட்டீங்க நிறைய புகைப்படங்கள் இன்னும் அதிகம் ரசிக்கவைக்கின்றன !

நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தமிழ் அமுதன்,
மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ஆயில்யன்,
மிக்க மகிழ்ச்சி ஆயில்யன். நன்றி.

தமிழ் உதயம் said...

பல புண்ணிய ஸ்தலங்களுக்கு எங்களை கூட்டி போறிங்க.

Gayathri Kumar said...

Snaps are great. Never heard of this temple. Nice article..

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தமிழ் உதயம்,
கருத்துக்கு மிக்க நன்றி ரமேஷ்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Gayathri's Cook Spot,
மிக்க நன்றி காயத்ரி.

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. அத்தனை சிற்பங்களையும் வெகுவாகு ரசித்தேன். மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி மேடம்.

தமிழ் உதயம் said...

பல புண்ணிய ஸ்தலங்களுக்கு எங்களை கூட்டி போறிங்க.

Menaga Sathia said...

மிக அருமையான புகைப்படங்கள்..தகவல்களுக்கு மிக்க நன்றி!! நிறைய திருத்தலத்துக்கு அழைத்து போகும் உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி மேனகா.

விஜய் said...

சிற்பங்களை காணும்போதே நேரில் தரிசிக்க ஆவல் பிறக்கிறது

நன்றி சகோ

விஜய்

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள். நன்றி சகோ.

Kanchana Radhakrishnan said...

பகிர்வுக்கு நன்றி. எல்லா சிற்பங்களையும் ரசித்தேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.

Madhavan Srinivasagopalan said...

//நரசிம்மர் இரணியனை வதம் செய்யும் காட்சி, நம் கண் முன்னே நடப்பது போன்ற பிரமை.//

All Pillar architectural works are fantastic.

Another 'Choodik koduththa Sudarkodi' story (like HH Andal's)

R. Gopi said...

வழக்கம் போல சூப்பர். எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் தாராசுரம் கோவிலிலும் நிறைய சிற்பங்கள் உண்டு. படம் பிடித்துப் போடுகிறேன். அப்புறம் புதுக்கோட்டை அப்பா வழியில் சொந்த ஊர்

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Madhavan Srinivasagopalan,
ஆமாம், அத்தனையும் அற்புதம். நன்றி மாதவன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Gopi Ramamoorthy,
தாராசுரம் கோயில் சிற்பங்களைப் பற்றி அவசியம் பதிவிடுங்கள். நானும் வாய்ப்பு கிடைத்தால் படம் பிடித்துப் போடுகிறேன். நன்றி கோபி.

எம்.எம்.அப்துல்லா said...

நீங்கள் குறிப்பிட்டவை மட்டுமின்றி தட்டினால் ஸ்வரங்கள் ஒலிக்கும் கல்லும் அங்கு உண்டு. செல்லவிரும்புவர்கள் புதுக்கோட்டை நகரில் இருந்து பரம்பூர் மற்றும் கிளிக்குடி செல்லும் நகரப் பேருந்துகளில் ஏறி இங்கு செல்லலாம்.

தமிழ்க்காதலன் said...

புவனா... மிக சிரத்தை எடுத்துக் கொண்டு இந்த பதிவை தந்திருப்பது தெரிகிறது. முயற்சிக்குப் பாராட்டுக்கள். கடைசியாய் நீங்கள் சொன்ன உண்மைகள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய நன்மை. தலவரலாறு பற்றி நீங்கள் கூறிய கருத்துகளில் எனக்கு நிறைய சந்தேகங்கள் வருகின்றன. ஒரு கதையை சொல்லுவதால் இந்த சமூகத்தில் நாம் தவறான முன்மாதிரியை கொடுத்து விடக் கூடாது.
குறிப்பு: "குடிமியான் மலை" என்பது "பார்ப்பனீய ஆதிக்கம்" என்பதை சுட்டும் பொருளையும் தருவதை தாங்கள் மறந்து விடக் கூடாது. நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@எம்.எம்.அப்துல்லா,
தாங்கள் கூறிய தகவலுக்கு மிக்க நன்றி. அடுத்த முறை செல்லும்பொழுது அவசியம் பார்க்க வேண்டும்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தமிழ்க் காதலன்.,
தாங்கள் குறிப்பிட்டிருக்கிற நோக்கில் எழுதப்படவில்லை. ஆண்கள் குடுமி வைத்திருப்பது முன்னர் பொதுவான விஷயம் தானே. தங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

//சிற்பக் கலையின் விஸ்வரூபமாய் குடுமியான்மலை//

உண்மைதான் புவனேஸ்வரி.

நானும் பார்த்து வியந்து போய் இருக்கிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

கருத்துக்கு நன்றி கோமதியம்மா.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

படங்களுடன் அருமை . நேரில் பார்த்தது போல் இருக்கு ... உபுண்டுல படிக்க முடியல கொம்கம் என்னனு பாருங்க ..

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி புதிய மனிதா.. கடைசில என்ன சொல்லியிருக்கீங்கனு புரியல.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நன்றி, இந்த கோவிலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும். உதவ முடியுமா தல

ஏதேனும் தொடுப்புகள், தளங்கள் இருந்தால் சொல்லுங்களேன்

புவனேஸ்வரி ராமநாதன் said...

'குடுமியான்மலை' என்று தமிழில் கூகிளில் தேடினால் நிறைய தளங்கள் கிடைக்கின்றன. மிக்க நன்றி.

அப்பாதுரை said...

குடிமியான்மலை எங்கே இருக்கிறது, எப்படிப் போவது, எங்கே தங்குவது என்ற விவரங்கள் எழுதினால் உதவியாக இருக்குமே? படமும் விவரங்களும் அருமை.

புவனேஸ்வரி ராமநாதன் said...

புதுக்கோட்டையில் இருந்து கொடும்பாளூர் வழியாக மணப்பாறை செல்லும் வழியில் 20 km தொலைவில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் தங்கி சென்றால் வசதியாக இருக்கும். மிக்க நன்றி அப்பாதுரை.

முகவை மைந்தன் said...

படங்களோட அருமையான இடுகை. அடுத்த முறை ஊருக்கு வரும்போது பாத்துட வேண்டியது தான் ;-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி முகவை மைந்தன்.

Muniappan Pakkangal said...

Nalla post,i'm planning a trip 2 Kudumiyaanmalai.

புவனேஸ்வரி ராமநாதன் said...

சென்று வாருங்கள் முனியப்பன் ஐயா. பார்க்க வேண்டிய இடம்தான்.

மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி கோபி. மீண்டும் சந்திப்போம்

Post a Comment

Related Posts with Thumbnails