Saturday, October 9, 2010


விஜயாசன பெருமாள் திருக்கோயில் (வரகுணமங்கை)

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம், விஜயாசன பெருமாள் திருக்கோயில், நத்தம், தூத்துக்குடி(வரகுணமங்கை).


திருக்கோயில் அமைவிடம்:
அருள்மிகு விஜயாசன பெருமாள் திருக்கோயில் தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக்குறிப்பு:
தல மூர்த்தி: விஜயாசனர் (வெற்றிருக்கைப் பெருமாள்)
தல இறைவி: வரகுணவல்லி, வரகுணமங்கை
தல தீர்த்தம்: தேவபுஷ்கரணி, அக்னி தீர்த்தம்
கிரகம்: சந்திரன் ஸ்தலம்


திருத்தல வரலாறு:
இந்த விஜயாசனர் பெருமாள் திருக்கோயில், நவதிருப்பதிகள் எனப்படும் ஒன்பது கோயில்களில் இரண்டாவது திருப்பதியாக அமைந்துள்ளது. நவகிரஹ ஸ்தலங்களில் சந்திரன் ஸ்தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான திருக்கோயில். இக்கோயில் உற்சவர் அருள்மிகு எம் இடர்கடிவான் என அழைக்கப்படுகிறார்.


ரோசமர் என்னும் முனிவர் இந்த வரகுணமங்கையில் தவம் புரிந்து வந்தார். ரோசமர் முனிவரிடம் சத்தியவான் என்பவர் சீடராக இருந்தார். சத்தியவான் ஒரு நாள் வரகுணமங்கை திருப்பதியில் உள்ள அகநாச தீர்த்தத்தில் நீராடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்தக் குளத்தில் ஒரு செம்படவன் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். வலையை மீண்டும் மீண்டும் வீசி மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தபோது அவரது பின்னாலில் இருந்து ஒரு நாகம் அவரைத் தீண்டியது. அதனால் செம்படவன் உயிர் நீத்தார். நாகமும் மறைந்து சென்றது.

உயிர் நீத்த செம்படவன் சொர்க்கம் சென்றடைந்தார். அவரது சரீரத்தை பறவைகள் உண்டன. இதனைக் கண்ட சத்தியவான் தன் குரு ரோமசரிடம் சென்று, பிற உயிர்களுக்கு பாவம் செய்து வாழ்ந்த இவருக்கு எவ்வாறு சொர்கலோகப் பதவி கிடைத்தது , என்று வினவினார். அதற்கு ரோசமர் முனிவர், வரகுணமங்கை என்னும் இத்தலத்தில் உயிரை விட்டதால் அவருக்கு சொர்க்கம் கிடைத்தது என்று கூறினார்.

மேலும் ரோசமர் முனிவர் கூறியதாவது, முன்னொரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புண்ணியகோசம் என்னும் இடத்தில் வேதவித் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தார். அவர் தன் தாய், தந்தை, குரு ஆகியோரை வணங்கி வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளையும் செய்து வந்தார். தனது பெற்றோரது காலத்திற்குப் பிறகு இறைவனை, பெருமாளை எண்ணி கடும் தவம் புரிய நினைத்தார். அவர் இவ்வாறு நினைத்தவுடன் பெருமாள் ஒரு பிராமண ரூபத்தில் தோன்றி ஸஹ்ய மலைகளின் நடுவே உள்ள வரகுணமங்கை என்னும் திருப்பதிக்குச் சென்று தவம் புரியும் படி கூறினார். உடனே வேதவித் வரகுணமங்கை சென்று தவம் இருந்தார். இவரது தவத்தினை ஏற்ற பெருமாள் வேதவித் முன் தோன்றினார். பெருமாளிடம் வேதவித், இந்த வரகுணமங்கை தலத்தில் விஜயாசனன் என்ற திருநாமத்துடன் எழுந்தருள வேண்டும் என வேண்டினார். அவ்வாறே பெருமாளும் இத்தலத்தில் விஜயாசன பெருமாளாக வீற்றிருந்து அனைவருக்கும் அருள் புரிகிறார். வேதவித் பிரம்மச்சாரியாக வாழ்ந்து முக்தி அடைந்தார்.


காலமு நோயுங் கருதாத வண்ணைமீர்
வேலன் வெறியை விலக்குமின் கண் - மாலம்
வரகுணமங்கை யன்றாள் வண்டுழாய் மேலா
தரகுண மங்கை தனக்கு
(108 திருப்பதி அந்தாதி 55 )

12 comments:

R. Gopi said...

சூப்பர்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி கோபி.

Madhavan Srinivasagopalan said...

2003ம் ஆண்டு இந்த தலத்தினை தரிசிக்கும், வாய்ப்பு பெற்றேன்.
இந்த பதிவு என்னை ஏழு வருடங்களுக்கு பின்னால் அழைத்துச் சென்றது.
நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மாதவன்.

Menaga Sathia said...

நிறைய கோவில்களை உங்கள் பதிவின் மூலம் அறிகிறேன்..மிக்க நன்றி!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேனகா.

மதுரை சரவணன் said...

thanks for sharing.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி சரவணன்.

ராம்ஜி_யாஹூ said...

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் வந்துள்ள அருமையான பதிவு. நன்றிகள் பல

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ராம்ஜி.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அருமை

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி புதிய மனிதா..

Post a Comment

Related Posts with Thumbnails